Skip to main content

லவ் மார்க்கெட்டிங் - 1

வாழ்க்கை பசுமையே இல்லாம ரொம்ப காஞ்சு போய் என்னடா வாழ்க்கை இதுங்கற மாறி போயிட்டு இருந்தது. கிட்டத்தட்ட விண்ணை தாண்டி வருவாயா சிம்பு மாதிரி தான் என் வாழ்க்கையும். ஆனா நான் சினிமால இல்ல, நான் ஒரு சேல்ஸ் எக்ஸ்சிக்யூடிவ், ஃபீல்ட் வொர்க் தான் என்னோடது, ஏ.சி ரூம், கேஃபே, பர்த்டே பார்டி, ஃபன் கேம்ஸ்னு எதுவும் கிடையாது. அலையனும் நாய் மாரி. அப்போது ராமை ஒரு கார் கடந்து சென்றது, அதன் ஜன்னல் வழியே ஒரு நாய் தலையை நீட்டி இவனை பரிதாபமாக பார்த்துக்கொண்டே சென்றது. ஹும் நாய்லாம் கூட சொகுசா தான் வாழுது. ஆனா நம்ம நெலம! 


ஏதோ பெரிய கார்போரேட் கம்பெனி ஓட எக்ஸ்சிக்யூடிவ் லாம் கிடையாதுங்க நான், அழகு சோப்பு கம்பெனினு ஒரு உப்புமா கம்பெனி. வீடு வீடா போய் கதவ தட்டி, இந்த சோப்ப வாங்கிக்கோங்க உங்க அழகு கூடும், தண்ணில கூட கரையாது பல மாசம் சோப்பு பில் மிச்சம்'னு பல பொய்ய சொல்லி விப்பேன். 


அப்படி மாசம் முழுக்க வித்தா எவ்வளவு விக்கும்னு நினைக்குறீங்க சுமாரா பதினஞ்சுல இருந்து இருபது வர தீரும். என் டார்கெட் எவ்வளவு தெரியுமா? அஞ்சு! ஆமாங்க வெறும் அஞ்சே அஞ்சு தான். ஏன்னா என் கம்பெனி ஓட ரேன்ஜ் அவளோதான். அவனுங்களுக்கே தெரியும் இதுலாம் ஒரு பய கூட வாங்க மாட்டன்னு. இருந்தும் நான் இங்க வேல செய்யுறேன்னா, எனக்கு சிட்டில வாழனும்கறது கனவுங்க.


இருபத்தி ரெண்டு வயசுல என்ன கமிட்மெண்ட் இருக்கபோவுது. எந்த பிரச்னையும் இல்லாம இருக்கேன். என் சம்பளம் மூனாயிரம் தான். என் அப்பா அம்மா ரெண்டு பேரும் காட்டுல விளைஞ்சத காசாக்கி எனக்கு மாசம் பத்தாயிரம் அனுப்புறாங்க. அப்படி நான் சிட்டில வாழணும்னு துடிக்க காரணம், என்னோட சின்ன வயசு தான். 


தஞ்சாவூர்ல ஒரு குக்கிராமம் என்னோட ஊரு, அங்க தான் என் வாழ்க்கையே கழிஞ்சது.  அப்பா அம்மாக்கு நான் ஒரே பையன், அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஸ்கூல்லாம் தஞ்சாவுர்லயே தான் படிச்சேன், காலேஜ் ஆவது ஒரு சிட்டில போய் படிக்கணும் ஆச காசிருந்தும், அப்பா அம்மா என்ன விடல. அதுனால காலேஜும் லோக்கல்லயே படிச்சேன். படிச்சுட்டு எப்படியாச்சும் சிட்டில போய் வேல செய்யனும்னு வீட்ல சண்ட போட்டுட்டு வந்துட்டேன். 


நான் படிச்சது பி.பி.ஏ, இங்க என் ஊர்ல இருந்து வந்து ஒரு அண்ணன் இருக்காரு  அவங்க ரூம்ல நானும் தங்கிக்கிடேன். சிட்டி லைஃப் எப்படி இருக்கும்னு டி.வி, சினிமால பாத்தேனோ அதுக்கு நேர்மாறா இருந்துச்சு. இங்க எதத் தொட்டாலும் பணம். டென்ஷன் ஓட தான் மக்கள் இயங்குறாங்க, ஏன் எதனாலனுலாம் சொல்லத் தெரியல. இங்க வந்தா அப்படி ஆகிடுவோம் போல. நான் இங்க வந்து நாலு மாசம் ஆச்சு, இங்க இருக்க செயற்கை தன்மை எனக்கு செட் ஆகல. பேசாம ஊர் பக்கம் போயிறலாம்னு மனசுல தோணிட்டே இருந்தது...


மரத்தடிங்கறதால கொஞ்சம் நிக்காலம்னு நின்னா, எதிர்த்த வீட்டு செக்யூரிடி ஒரு மாறி குறு குறுனு பாக்க ஆரமிசுட்டான், சரி போய் இன்னும் இரண்டு சோப்பு விப்போம்னு கெளம்புனேன். அப்போ அந்த அப்சரா அபார்ட்மென்ட் குள்ள இருந்து ஒரு பொண்ணு வெளிய வந்துச்சு. கண்ணுல கூலிங் கிளாஸ் போட்டுட்டு அழகா இருந்தா அந்த பொண்ணு. பொதுவா அழகான பொண்ணுங்க கிட்ட பேச தயக்கம் தான். ஏன்னு தெரியல. சரி போய் பேசிப் பார்ப்போம்னு அவ பக்கத்துல போனேன்.


"மேடம், ஒன் மினிட் ப்ளீஸ்" என்றேன்.


அவள் நின்றாள். மேலும் கீழும் பார்த்தாள், அடிக்கும் வெயிலில் என்னுடைய டையும், புல் ஹாண்ட் ஷர்ட்டும் நான் ஒரு சேல்ஸ் மேன் என்று காட்டிகொடுத்திருக்கக் கூடும்.  


"யஹ், வாட்?" என்றாள்.


மேடம் எங்க கம்பெனி சோப் பத்தி சொல்லியே ஆகணும் என்றேன். 


"ஓலா புக் பண்ணிருக்கேன் வர 2 மினிட்ஸ் ஆகும், அதுக்குள்ளே சொல்லுங்க, பட் ஒன் கண்டிஷன். நான் உங்க ப்ராடக்ட்ட வாங்க போறதில்ல ஓகே" என்றாள்.


"நோ ப்ராப்ளம் மேடம், உங்களுக்கு நோர்ஸ் ட்ரீஸ் பத்தி தெரியுமா, கேள்வி பட்டிருக்கீங்களா?" என்றேன்.


அவளது புருவம் சற்று உயர்ந்தது... 


"நோ" என்று தலையாட்டினாள். 


"ஓகே மேடம் அப்போ நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன். உலகத்துலேயே, இந்த நோர்ஸ் மரங்கள் ஸ்வீடன், டென்மார்க் போன்ற  நாடுகள்ல தான் வளரும், ஏன்னா அந்த மரம் வேற எந்த மண்ணுல நட்டாலும் அது வளாராது..."


"ஏன் வளராது?" என்று ஆர்வத்துடன் கேட்டாள்.


"அங்க மட்டும் தான் ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ்னு சொல்லபடுற சூடான நீருற்றுகள் இருக்கு, அது பூமில இருக்க எரிமலைகளோட வெப்பத்தால அந்த நீர் சூடாகும், அந்த இதமான வெப்பத்துல தான் இந்த நோர்ஸ் மரங்கள் வளரும் மேடம்" என்றேன்.


"வாவ்! என்றாள்.


"அந்த நோர்ஸ் மரங்களோட வேர்ல இருந்து கிடைக்குற திரவத்தால செய்யபடுற சோப் தான் இந்த ஸ்பெஷல் அழகு சோப்ஸ் மேடம். ட்ரை பண்ணுங்கனு சொல்லமாட்டேன். உங்க விருப்பம்" என்று முடித்த போது அவளது டாக்சி வந்து நின்றது. 


என்னை கண்டுகொள்ளாமல் அவள் டேக்சி காரருடன் பேச சென்று விட்டாள். 


சுமாரான பொண்ணுங்கள ஏமாத்துற மாறி சூப்பர் பொண்ணுங்கள ஏமாத்த முடியாது போல என்று நினைத்துவிட்டு என் பைக்கில் ஏறினேன். அவள் ஏதோ போனில் பேசிக்கொண்டு இருந்ததாள். 


"ஹே சேல்ஸ் மேன்! ப்ளீஸ் வெயிட்" என்றாள். 


ஆகா ஏதோ வொர்க் அவுட் ஆகுது போல என்று பைக்கில் இருந்து இறங்கினேன். 


"என்ன சொன்னிங்க, நோர்ஸ் ட்ரீஸ் ஆஹ்" என்றாள்.


"ஆமா!" என்றேன் தயக்கத்துடன்.


மீண்டும் போனில் பேச ஆரமித்தாள். எனக்கு ஏதோ தவறாக நடக்கபோவது போல ஒரு எண்ணம் அடிவயிற்றில் இருந்து கிளம்பியது. 


"சரி மேடம் நான் கெளம்புறேன், டைம் ஆச்சு" என்றேன்.


அவள் போனை கட் செய்து விட்டு என்னருகில் வந்ததாள். 


"சோப் குடுங்க பாக்குறேன்" என்றாள்.


நானும் இரண்டு சோப்புகளை நீட்டினேன். அதில் பழைய ஐஸ்வர்யா ராய் படம் போட்டு இருந்தது அதனை ஒன்று இரண்டு முறை திருப்பி பார்த்துவிட்டு, சிறிது முகர்ந்து பார்த்தாள்.  சந்தேகத்துடன்...


"இது டவ் சோப்பவுட சூப்பரா இருக்குமா?" என்றாள்.


சற்றும் தாமதிக்காமல் "மார்க்கெட்ல பெஸ்ட் மேடம், ஒன்லி லிமிடெட் பீஸ் தான், அதுனால தான் டி.வில கூட விளம்பரம் வராது" என்றேன்.


"சரி அப்போ எனக்கு ரெண்டு குடுங்க, என் பிரண்ட் ரெண்டு வாங்க சொன்னா, சோ நாலு சோப் குடுங்க" என்றாள்.


நாலு சோப்பை வாங்கிவிட்டு தேங்க்ஸ் என்றாள். 


"மேடம் இது என் கார்டு, எதாச்சும் வேணும்னா கால் பண்ணுங்க" என்றேன்.


வாங்கிக்கொண்டு டாக்சியில் ஏறி சென்றுவிட்டாள்.


பார்த்தீங்களா மக்களே இப்போ புரிஞ்சதா, நான் எப்படி என்னோட டார்கெட்ட விட அதிகமா சேல்ஸ் பண்றேன்னு. 


தொடரும்...

Comments